லண்டன்,  இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் லார்ட்சில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டின் போது நோ-பால் வீசுவதற்கு ரூ.1 கோடிக்கும் மேல் லஞ்சமாக பெற்று பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.
சர்வதேச கிரிக்கெட் உலகில் சூதாட்ட அரக்கன் அடிக்கடி தலைதூக்குவது உண்டு. தற்போது மீண்டும் சூதாட்ட பிரச்சினை பூதாகரமாக வெடித்து இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்த சூதாட்டத்தில் சிக்கி உள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 டெஸ்ட் கொண்ட தொடரில் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.
இந்த போட்டியை மையமாக வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 7 பேர் , `ஸ்பார்ட் பிக்சிங்’ என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டு இருப்பது அம்பலமாகி உள்ளது.
இங்கிலாந்தின் `நிïஸ் ஆப் வேல்டு’ என்ற பத்திரிகை கிரிக்கெட் சூதாட்டத்தை கண்டுபிடிக்க அதிரடியாக களத்தில் குதித்தது. இதன்படி அந்த பத்திரிகையின் நிருபர்கள் குழு, தங்களை பத்திரிகையாளர்கள் என்று காட்டிக்கொள்ளாமல் பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர் மஷார் மஜீத்தை அணுகியது.
பத்திரிகை குழு சார்பில், மஜீத்திடம் ரூ.1 கோடிக்கு மேல் பணம் வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட அவர், பாகிஸ்தான் வீரர்களிடம் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தினார். பணத்துக்கு மயங்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆமிர், முகமது ஆசிப் உள்ளிட்டோர் `ஸ்பாட்-பிக்சிங்சில்’ ஈடுபட சம்மதித்தனர்.
`ஸ்பாட்-பிக்சிங்’ என்றால் ஆட்டத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சூதாட்ட புரோக்கர்கள் கேட்டுக்கொண்டபடி வீரர்களின் செயல்பாடு இருக்கும். இதில் எளிதில் யாருக்கும் சந்தேகம் வராது. லார்ட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் நோ-பால், வைடு வீச வேண்டும் என்பது தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட `பிக்சிங்’ ஆகும்.
அவர்களிடம் பேரம் பேசி பணத்தை சப்ளை செய்த பிறகு, பத்திரிகையாளர்களிடம் மஜீத் மறுபடியும் பேசினார். அப்போது, `நான் சொல்கிறபடி நாளை பாகிஸ்தான் வீரர்கள் மூன்று `நோ-பால்’ வீசுவார்கள். அது எப்போது வீசுவார்கள் என்பதை உங்களிடம் சொல்கிறேன். அதன்படி நிச்சயம் நடக்கும், அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டேன். நான் சொல்கிறபடி நாளை நிச்சயம் நடக்கும் என்று உறுதி அளிக்கிறேன். நான் சொல்கிறபடி கேட்டால் நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்கலாம். என்னை நம்புங்கள்’ என்று தெரிவித்தார்.
சூதாட்ட புரோக்கர் பத்திரிகை குழுவுக்கு உறுதி அளித்தப்படி, முகமது ஆமிரும், முகமது ஆசிப்பும், லார்ட்ஸ் டெஸ்டின் முதல் 2 நாட்களில் துளியும் பிசகாமல் குறிப்பிட்ட நேரத்தில் மூன்று நோ-பால்களை வீசினர். இதன் மூலம் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதை அந்த பத்திரிகை குழுவினர் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து இது தொடர்பான வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களை ஸ்காட்லாந்து யார்டு போலீசிடம் ஒப்படைத்தனர். அதன் அடிப்படையில் சூதாட்ட புரோக்கர் மஜீத் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவர் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான்பட் இந்த சூதாட்டத்திற்கு மூளையாக செயல்பட்டார். அவர் மூலம் தான் மற்ற வீரர்களுக்கு ரூ.1 கோடிக்கு மேலான தொகை பிரித்து கொடுக்கப்பட்டது. முகமது ஆமிர், முகமது ஆசிப், சல்மான்பட், விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் உள்பட 7 பேருக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருக்கிறது என்று அவர் போலீசிடம் கூறியிருக்கிறார்.
இதை தொடர்ந்து ஸ்காட்லாந்து யார்டு போலீசார், பாகிஸ்தான் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு நேரில் சென்று அதிரடியாக விசாரணை நடத்தினர். பல்வேறு விஷயங்கள் குறித்து துருவி துருவி கேள்விகள் கேட்டனர். சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர், கம்ரன் அக்மல் ஆகியோரின் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டனர்.
அத்துடன் சல்மான் பட், முகமது ஆமிர், முகமது ஆசிப் ஆகியோரின் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் சில முக்கிய ஆவணங்களையும் ஓட்டல் அறையில் கைப்பற்றி இருக்கிறார்கள். போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று பாகிஸ்தான் அணியின் மேலாளர் யாவர் சயீத் உறுதி அளித்திருக்கிறார். இதனால் வீரர்கள் பீதியில் உறைந்து போய் இருக்கிறார்கள். அவர்கள் கைதாகவும் வாய்ப்பு உள்ளது.
சூதாட்ட இருள் படர்ந்துள்ள லார்ட்ஸ் டெஸ்ட் 4-வது நாளான நேற்றுடன் முடிந்தது. இதில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 225 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சின் போது பாகிஸ்தான் வீரர்கள் எக்ஸ்டிரா வகையில் மட்டும் 7 வைடு, 14 நோ-பால் உள்பட 42 ரன்களை வாரி வழங்கினர்.
சூதாட்டத்தில் சிக்கிய முகமது ஆமிர் 4 நோ-பால், ஒரு வைடும், முகமது ஆசிப் 2 நோ-பாலும் வீசினார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள அறிக்கையில், `இந்த விவகாரம் தொடர்பாக வீரர்களோ, அணி நிர்வாகிகளோ யாரும் கைது ஆக வில்லை. தற்போது இந்த பிரச்சினை போலீஸ் விசாரணையில் உள்ளது. எனவே நாங்களோ, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமோ, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமோ எதுவும் செய்ய இயலாது. இருப்பினும் போலீஸ் விசாரணைக்கு நாங்களும், இங்கிலாந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் முழு ஒத்துழைப்பு அளிப்போம்’ என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வீரர்களுக்கு சூதாட்டம் ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பல முறை சூதாட்ட பிரச்சினையில் சிக்கி இருக்கிறார்கள். பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் மீது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போதே சூதாட்ட புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
சூதாட்ட புரோக்கர் மஜீத், இந்திய புரோக்கர்களுக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்களுக்கு நான் தெரிவிக்கும் தகவல் அடிப்படையில் பணம் பெற்றுக்கொள்வேன் என்றும் தெரிவித்து இருக்கிறார். இதனால் இந்திய வீரர்கள் யாருக்கும் சூதாட்டத்தில் தொடர்பு உண்டா என்ற பரபரப்பும் ஏற்பட்டிருக்கிறது.

0 comments:

Post a Comment

About Me

News of Sammanthurai
View my complete profile