நாடெங்கிலும் புதிய இன்புளுவென்ஸா ஏ(எச்1. என்1) வைரஸ் காய்ச்சல் தீவிரமடைந்திருப்பதால் கடந்த இரு வார காலப் பகுதியில் 18 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார அமைச்சின் நோய் பரவல் தடுப்பு பிரிவின் பிரதம மருத்துவ நிபுணர் சுதத் பீரிஸ் நேற்றுத் தெரிவித்தார்.
இக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்திருப்பவர்களில் பெரும் பகுதியினர் இளம் வயதினர். அதனால் எவருக்காவது தடிமல், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் நீடிப்பதுடன், மூச்செடுப்பதிலும் சிரமம் காணப்படுமாயின் தாமதியாது மருத்துவ நிபுணர்களை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், புதிய இன்புளுவென்ஸா ஏ (எச்1 என்1) வைரஸ் காய்ச்சல் நாடெங்கிலும் தீவிரமடைந்துள்ளது. இக் காய்ச்சலுக்கு குறுகிய காலத்தில் 308 பேர் உள்ளாகியுள்ளனர். இவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இக்காய்ச்சலுக்குக் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவிலானோர் உள்ளாகியுள்ளனர்.
தடிமன், இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவாறான குணாம்சங்களை கொண்டிருப்பவர்கள் அலுவலகங்களுக்கும், பாடசாலைகளுக்கும் செல்லுவதையும், பயணிகள் போக்குவரத்தைப் பாவிப்பதையும் தவிர்த்துக்கொள்ளுவதுடன் வீடுகளிலேயே ஓய்வாக இருக்க வேண்டும்.
புதிய இன்புளுவென்ஸா ஏ(எச்1 என்1) வைரஸ் காற்றின் மூலம் பரவக் கூடியது. அதனால் இருமும்போது இவ்வைரஸ்கள் சளித் துகள்கள் ஊடாக வெளிப்படும். அதன் காரணத்தினால் இருமும்போதும், தும்மும்போதும் கைக்குட்டைகளைப் பாவிப்பதும் கைகளைச் சவர்க்கார மிட்டுக் கழுவுவதும் மிக மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேநேரம் நீரிழிவு நோயாளர்கள், சிறுநீரக நோயாளர்கள், நாட்பட்ட சுவாசத் தொகுதி நோயாளர்கள், இருதய நோயாளர்கள் உட்பட நோய்த் தொற்றுக்குரிய அச்சுறுத்தல் மிக்கவர்கள் தாமதியாது இந்நோய்க்குரிய தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

0 comments:

Post a Comment

About Me

News of Sammanthurai
View my complete profile