நாட்டிலுள்ள சகல நீதிமன்றங்களும் கணினிமயப்படுத்தப்பட்டு வழக்கு விசாரணைகளை மிகத் துரிதமாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சட்ட உதவி மன்றமும், அம்பாறை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த மனித உரிமைகள் தொடர்பாக திணைக்களத் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சிறியானி விஜயவிக்ரம தலைமையில் வியாழக்கிழமை அம்பாறை தாதியர் பயிற்சிக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில்; நாட்டில் நீதியையும், சட்டத்தையும் நிலைநாட்டுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எடுத்துள்ள முயற்சியில் நாட்டில் யுத்தமொன்று இல்லாத காலத்தில் நீதியமைச்சின் பொறுப்பினை எமக்கு வழங்கியுள்ளமை மகிழ்ச்சி தருகிறது. இந்த அமைச்சினூடாக நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த பணிகளை மேற்கொள்வதற்கு நீதித்துறையில் நன்மை மிகுந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு எண்ணியுள்ளேன்.
10 வருடங்களுக்கு மேலாக நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விசாரிப்பதற்கென ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவினை அமைத்து அதன் விசாரணை நடவடிக்கைகளை 2 வருடங்களுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென வரவு செலவுத் திட்டத்தில் 400 மில்லியன் ரூபா பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையேற்படும் பட்சத்தில் இதனை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான சமாதான உடன்படிக்கை காலப்பகுதியில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுகளில் கலந்துகொண்ட அரசியல் தலைவர்களில் நானும், ஒருவன். ஆனால், விடுதலைப் புலிகளுக்கு சமாதானப் பேச்சுகளிலும் அரசியல் தீர்விலும் நாட்டமிருக்கவில்லை. மாறாக புலிகள் தம்மைப் பலப்படுத்திக்கொள்ளவே செயற்பட்டனர். புலிகளை ஒழித்து நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதியை நாட்டுமக்கள் அங்கீகரித்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய நீதித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார் என அவர் மேலும் தெரிவித்தார்

0 comments:

Post a Comment

About Me

News of Sammanthurai
View my complete profile